உலகில் உள்ள எல்லா பெரிய நாடுகளும், சாமானிய மக்களின் தாய் மொழியில் உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வியை அளித்துதான் முன்னேறிய நாடுகளாக மாறியுள்ளன. ஆனால் இந்தியாவில், விடுதலைக்கு 70 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒரு இடைக்கால மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கிலம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது பரிதாபமான விஷயம். உச்சநீதி மன்றத்திலோ அல்லது பெரும்பாலான உயர்நீதி மன்றங்களிலோ, ஒரு இந்தியக் குடிமகன் அவனது/அவளது தாய் மொழியில் வாதாட முடியாது. அவர்களுடைய மொழியில் தொழில்நுட்ப அல்லது தொழில்சார்ந்த பட்டங்கள் பெற முடியாது. கிட்டத்தட்ட எல்லா முனைப்புகளிலும், ஆங்கிலம் ஒரு தடையாக உள்ளது.

தொடக்கப் பள்ளி நிலையிலேயே ஆங்கிலத்தை திணிப்பது இதற்கு தீர்வாகாது. பல வருடங்களாக யுனெஸ்கோ வழிகாட்டிகளில், ஒரு குழந்தை அதனுடைய தாய் மொழியில்தான் மிகச் சிறப்பாக கற்றுக்கொள்கிறது என்று கூறுகிறது. இந்தக் கூற்று, ஏராளமான அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே உருவாகியுள்ளது. எல்லா நிலைகளிலும் ஆங்கிலத்தை திணிப்பது, ஒரு டிஜிட்டல் மற்றும் அறிவியல் சார்ந்த உலகில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளத் தடையாக உள்ளது. நம்முடைய பன்முகக் காலாசாரம் ஒரு சாபமாகவே ஆகிவருகிறது. ஒரு காலத்தில் புதுமைகளை புகுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோலோச்சிய நம் நாகரீகம், இன்று ஆங்கில வழிக் கல்வி முறையால், மேற்கு நாடுகளிலிருந்து எல்லாவற்றையும் நகலெடுக்கும் ஒரு நாகரீகமாகவே மாறிவிட்ட்து. இந்த சீரழிவை நிறுத்தி, இந்தியாவை உண்மையான அறிவுகொண்ட புதுமை காணும் சமுதாயமாக உருவாக்க வேண்டும். மீண்டும் நமது மகோன்னதப் பெருமை நிலை நாட்டப்பட, நம் குழந்தைகள் தத்தம் தாய் மொழியிலேயே கற்பது அவசியமாகிறது.

பாஜக, தன் 2014 தேர்தல் அறிக்கையில், இந்திய மொழிகளை ஊக்குவிக்க கீழ்க்கண்ட உறுதியை அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது:

மொழிகள்: செம்மையான இலக்கியம், வரலாறு, கலாச்சாரம், கலை மற்றும் அறிவியல் சாதனைகளைக் கொண்டவை இந்திய மொழிகள். நம்முடைய பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு முக்கியத் தகவல் களஞ்சியமாக அவை உள்ளன. பாஜக, இந்திய மொழிகளை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கைகள மேற்கொள்ளும். அதன்மூலம் அம்மொழிகள் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கி, ஒரு சக்திவாய்ந்த சாதனமாக இருக்கும்.”

இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த, இந்தியக் குழந்தைகளும் இளைஞர்களும், அவர்களின் அனைத்து கல்விநிலைகளிலும், இந்திய மொழிகளிலேயே பயிலும் வாய்ப்பினைப் பெறும்படி சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசாங்க வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் வட்டி குறைப்பு போன்ற சலுகைகளை அளித்து, தத்தம் இந்திய மொழிகளிலேயே கல்வி கற்க அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். நிர்வாகம், நீதி மன்றங்கள், போட்டித்தேர்வுகள் மற்றும் அனைத்து கல்விநிலைகளிலும், அனைத்திந்திய மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். மத்தியில் எல்லா மொழிகளிலும், மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலும் இக்கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும். தற்போது கணினி வழி மொழிபெயர்ப்பு வந்துள்ளதால், 70 வருடங்களுக்கு முன்புபோல் இல்லாமல், இப்போது இதனை எளிதாகச் செய்யலாம்.

Leave a Reply