இப்போதைய காலக்கட்டத்தில் நாம், நம் பாரம்பரியத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் இருவேறு மிரட்டல்களை சந்திக்கிறோம். ஒன்று, அந்நிய நிதியுதவி பெற்ற அமைப்புக்கள் நடத்தும் பெரிய அளவிலான மதமாற்றங்கள். இதனை மதமாற்ற சக்திகள் நம்மீது தொடுக்கும் போர் எனவும் கொள்ளலாம். இரண்டாவது இந்திய அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்கள் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கிராமிய பழக்க வழக்கங்களின் மீது தொடுக்கும் ஆக்கிரமிப்புகள்.  இச்செயல்கள் பெரும்பாலும் அந்நிய நிதியுடன் இயங்கும் அமைப்புகள் போடும் பொதுநல வழக்குகளால் உருவானவை. நம் அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவன் விரும்பும் மதத்தினையோ, பழக்க வழக்கங்களையோ பின்பற்ற வழிவகை செய்துள்ளது. இது தனி நபருக்கான உத்திரவாதம். ஒதுபோதும் இது அமைப்புசார்ந்த மதமாற்றத்திற்கான உத்திரவாதமல்ல. மதமாற்ற அமைப்புகள் தன் திறன் வாய்ந்த அமைப்புதவி கொண்டு மக்களிடம் ஆசையை தூண்டி, முடியாவிட்டால் நிர்ப்பந்தப்படுத்தி மதமாற்றத்திற்கு வழிகோலுகின்றனர். இச்செயல் இந்து சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு. இந்து மதத்தின் மீதும், அதன் கலாச்சாரம், நாகரீகம் மற்றும் பண்பாட்டின் மீதும் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு. இவ்வமைப்பு சார்ந்த மதமாற்றங்களினால், பற்பல நாட்டுப் பூர்வகுடிகளின் மதம், பாரம்பரியம், கலாச்சாரம், நாகரீகம் முதலியவை அழிவுற்றதை சரித்திரம் சொல்கிறது. நம் நாகரீகம் சனாதன தர்மம் சார்ந்தது. மிகத் தொன்மையானது. அதனாலேயே மதமாற்ற சக்திகளினால் நாம் குறிவைத்துத் தாக்கப்படுகிறோம். இந்திய அரசு ஒவ்வொரு குடிமகனின் மதச் சுதந்திரத்தை தராசின் ஒரு முனையிலும், பரந்த நம் நாகாரீகத்தைக் காப்பதில் உள்ள கடமையை மறுமுனையிலும் வைத்து சமநிலை செய்ய முற்பட வேண்டும். இதுவே இந்து மதத்தின் மீதுள்ள தாக்கத்தை முறியடிக்கச் சரியான வழியாக இருக்கும். இச்சமநிலையை காண, அரசு எந்த ஒரு குடிமகனும், அவன் சார்ந்த மதத்தைப் பேணவும், அவன் விரும்பினால் வேற்று மதத்தைத் சாரவும் உத்திரவாதம் அளிக்கிறது. ஆனால் இவ்வரசு ஒருபோதும் அமைப்பு சார்ந்த மதமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது., அச்செயல்களை சட்ட விரோதமாக பாவிக்க வேண்டும். ஏனெனில் அவை இந்து சமயத்தையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் அழிக்க வல்லவை.

பாரம்பரியத்தின் வெவ்வேறு பிரிவுகள் பற்பல விழாக்களையும், நாள், கிழமைகளில் சிற்சில மாண்புகளையும் சடங்குகளையும் கோட்பாடுகளையும் அனுசரிக்கின்றனர். இவற்றின் நோக்கம் ஆன்மீகமும் உலகியலும் மட்டுமே. இவை புத்தகம் சார்ந்த மதங்களுடன் மிகவும் வேறுபட்டவை. இச்சடங்குகளும், விழாக்களும், மாண்புகளும் பல நூற்றாண்டுகளாக இந்துக்களால் அனுசரிக்கப்படுகின்றன. இவற்றை நியாயப்படுத்துவதற்கு எந்த ஒரு தனி புத்தகமோ,  நூலோ கிடையாது. அதற்கு தேவையுமில்லை. இவை பல நூற்றாண்டுகளாக இந்துவின் இரத்தத்தில் ஊறியவை. இவை இன்றளவும் தொடர்கின்றன. இவற்றின் மதிப்பு இந்துக்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும். வேறுயாரும் பூதக்கண்ணாடி அணிந்து அலசி ஆராயத்தேவையில்லை. எந்த ஒரு விஞ்ஞானம் ஒரு பழக்கத்தை ஏளனப்படுத்தி அது மூடப்பழக்கம் என்றதோ அதே விஞ்ஞானம் சில வருடங்களுக்குப்பின் அதன் மேன்மையை உணர்ந்து பாராட்டலை தெரிவிக்கிறது. நம் பாரம்பரிய உணவுப் பழக்கங்கள் இதற்கு சரியான உதாரணம் ஆகும். காலனி ஆதிக்க மனோநிலையில் இருப்பவர்கள் ஒரு பழக்கத்தை பழுதுபட்ட கண்ணாடிகளைக் கொண்டு பார்ப்பவர்கள்.  அவர்கள் ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் மூலமாக இப்பழக்கம் ‘அறியாமையால் வந்தது’, ‘மூட நம்பிக்கை’ ‘காட்டு மிராண்டித்தனம்’ – என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். பொதுநல வழக்காக இதை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். இவர்களின் இச்செயல், “ஒரு நாய்க்கு அவச்சொல் ஏற்படுத்து, தூக்கில் போடு” என்ற வசனத்தை ஒத்தது. நம் பாரம்பரியச்  செயல் பிறர் நியாயப்படுத்தலுக்கு அப்பாற்பட்டவை. அதனை கடைப்பிடிப்பவனுக்கு அதன் நியாயம் புரிந்தால் போதும். நம் சமுதாயம், வேண்டிய அளவு சீர்திருத்தவாதிகளைக் கொண்டது. அவர்கள் தேவைப்படும் சீர்திருத்தங்களை, தேவையான தருணங்களில் செய்யும் வல்லமை பெற்றவர்கள். நம் சமுதாய சீர்திருத்தம் நீதிமன்றங்களின் வேலை அல்ல.

நம் மதம், கலாச்சாரம், பாராம்பரியம், கிராமீய பழக்க வழக்கங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை சிதைத்துவிட்டன. நம் தனிப்பட்ட, அழகான, பன்முக பழக்கவழக்கங்கள் மீது ஒரு மரண அடி விழுந்திருக்கிறது.  தேவையில்லாத இத்தலையீடு சமூக எதிர்ப்புகளையும், கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஜல்லிக்கட்டு, தஹி ஹண்டி, சபரிமலை, சனிசிக்னாப்பூர், காம்பாலா முதலியவை இதற்கு உதாரணங்கள்.

நம் புராதான நாகரீகம் இவ்விரு கொடிய அச்சுறுத்தல்களால் வாழ்வா, சாவா என்ற நிலையை எட்டியுள்ளது.  ஒரு முரண்பாடு என்னவெனில், நம் மூதாதையர் காட்டுமிராண்டித்தனமான அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும், நெடிய அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்தும் நம் நாகாரீகக் கலாச்சாரங்களை காத்து, அவற்றை நமக்கு விட்டுச் சென்றனர்.  அதனை இந்துக்களாகிய நாம் நம் சுதந்திர இந்தியாவிலிருந்து காக்க முடியாமல் அழியும் நிலைக்குத் தள்ளிவிட்டோம்.

நம் பரம்பரைச் சொத்துக்களை அழிக்கும் அதிகாரம் நமக்கு ஒரு போதும் கிடையாது. அவை கண்ணால் அறியப்படும் உறுதியான சொத்துக்களாக இருக்கட்டும், அல்லது பெரிதும் அறியப்படாத மதக் கலாச்சாரங்களாகட்டும், நம் அதிகாரம் அவற்றை காப்பதே. காத்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பதே. இதனை நாம் நம் தலையாய கடமையாகக் கருத வேண்டும். முடிந்தால் சிற்சில சிறப்புக்களை அவற்றுக்கு செய்யலாம். இல்லையேல் எவ்வாறு நமக்கு கிடைத்ததோ அவ்வாறே ஒப்படைப்பது சாலச்சிறந்தது. நாம் நம் கூட்டெலி மனோபாவத்தை விட்டொழிக்காவிட்டால் மிக்ப் பழமையான நாகரீகங்களான மெசபொடோமியன், ரோமன், கிரேக்கன், ஸரோஸ்டிரிPயன் – பெரிசியன், இன்கா, மாயன், அஸ்டெக் இவற்றுக்கு ஆன கதியே நம் நாகரீகத்திற்கும் ஏற்படும்.

சட்டத்தின் மூலமாகவும், ஆட்சி மற்றும் பொதுக் கொள்கை மூலமாகவும் பூர்வகுடிமக்களின் பாதுகாப்பு, வளர்ச்சி, ஊக்கம் போன்றவற்றை உறுதி செய்ய ஐ.நா.சபை  தன் “அறிவிப்பு – பூர்வகுடி உரிமை 2007 (UMDRIP)” மூலமாக தன் உறுப்பினர் நாடுகளை வலியுறுத்துகிறது. இந்திய அரசியல் சாசனம் பிரிவு 259, பன்னாட்டு மாநாடுகளின் பிரகடனங்களை, மக்களவை சட்டங்கள் மூலமாக செயல்படுத்த அரசை கேட்டுக் கொள்கிறது. அதன்படி, சனாதன தர்மத்தை அதன் எண்ணற்ற வடிவம் மற்றும் வெளிப்பாடுகளுடன் காப்பதும்,வளர்ச்சியுற வைப்பதும்,ஊக்குவிப்பதும் பரப்புவதும் இந்திய அரசின் கடமையாகிறது.

பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை 2014 இந்தியாவை அதன் நாகரீக அடித்தளத்தை உறுதி செய்யும் வகையில் கட்டியமைக்க உத்திரவாதமளித்தது. இத்தேர்தல் அறிக்கையின் சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

“எந்த ஒரு நாட்டுக்கும் அதன் சரித்திரம், சரித்திரவேர்கள், வலிமை மற்றும் தவறுகள் பற்றிய சரியான புரிதல் வேண்டும். அப்புரிதல் இல்லாமல் உள்நாட்டு அல்லது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பது கடினம். அது வியர்த்தமுமாகும். தற்போதைய உலகளாவிய மற்றும் மொபைல் சூழலில் ஒரு நாடு  தன் சரித்திர வேர்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்வதே அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும்”.

“லோகமான்யதிலகர், காந்திஜி, அரவிந்தர், பட்டேல், போஸ் முதலியவர்கள் முன்னெடுத்துச் சென்ற இந்திய விடுதலை இயக்கத்திற்கு இந்தியாவின் நாகரீக பிரக்ஞ்னை தெளிவாக இருந்தது. இந்திய வழிமுறைகளையும், எண்ணங்களையும் முன்னிறுத்தி இத்தலைவர்கள் விடுதலைப் போரை வழிநடத்தினர். அவர்களின் கனவு இந்திய நாகரீகத்தின் முத்தாய்ப்பான “ஒரே நாடு, ஒரே மக்கள்” கொள்கை மற்றும் அதன்படி அரசியல் மற்றும் பொருளாதாரச் சட்டமைப்புகளை திருத்தியமைப்பதே. அக்கொள்கையே இந்தியா ஒரே தேசமாக பரிமளிப்பதற்கு ஏதுவானது”.

“சுதந்திர இந்தியாவின் முக்கியத்தலைவர்களுக்கு இத்தகைய மனோநிலையோ, பார்வையோ இல்லாமல் போனது. தேசத்தின் உயிர்நாடி எவை என்ற புரிதலும் அவர்களுக்கு இல்லாமல் போனதும் நம் துரதிருஷ்டமே. தேசத்தின் இந்த உயிர் நாடியே நாட்டு மக்களுக்கு பன்னாட்டு தாக்குதல்களையும், நெடுங்கால அந்நிய ஏகாதிபத்தியத்தையும் தாங்கும் வலிமையை கொடுத்து, அவர்களை காப்பாற்றி வந்தது. இவ்வுண்மையை புரிந்து கொள்ளாத சுதந்திர இந்தியாவின் தலைவர்களுக்கு மக்களின் மன உணர்ச்சிகளை கண்டறியும் ஆற்றலும், அவர்களை வழிநடத்தும் திறமையும் இல்லாமல் போனது”.

“நாடு சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகள் ஆகின்றது. எனினும் நம் தலைவர்களுக்கு நம் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறனும், சூழ்ந்துள்ள காலத்தின் கட்டாயங்களும், அவற்றை எதிர்கொள்ளும் திறனும் இல்லை. இதனால் புராதான மகோன்னத நாகரீகத்தையும், புதிய தலைமுறை குடியரசையும் நாம் கொண்டிருந்தாலும் பற்பல நெருக்கடிகளால் தற்போது சூழப்பட்டுள்ளோம். நம் நோய் யாது,  நோய் நாடி எவை என்ற புரிதலும் குணம் நாடும் திறனும் நமக்கும், நம் தலைவர்களுக்கும் இல்லை என்பதே சோகம்”.

எனவே பி.ஜே.பி தன் தேர்தல் அறிக்கை 2014 ன்படி கொடுத்த உத்திரவாதத்தினை முன்னிறுத்தியும், ஐ.நா.சபையின் அறிக்கை “பூர்வகுடி உரிமை 2007” படி  மத்திய அரசு  நிறைவேற்ற வேண்டிய கடமையை முன்னிறுத்தியும் இந்துக்களாகிய நாங்கள் எங்களின் பாரம்பரிய  கலாச்சாரத்தையும், மத பழக்கவழக்கங்களையும் காப்பற்றவும், அமைப்பு சார்ந்த மத மாற்றத் தடை சட்டத்தை இயற்றவும் வேண்டிக் கொள்கிறோம். மக்களவையின் எதிர் வரும் கூட்டத் தொடரிலேயே “மதச் சுதந்திரம், பூர்வகுடி கலாச்சார, மதப்பழக்கங்கள் மற்றும் அமைப்பு சார்ந்த மதமாற்றத் தடை”  சட்டத்தை அகில இந்திய அளவில் நிறைவேற்ற வேண்டுகிறோம். மாறாக ஒரு அவசரச்சட்டம் மூலமாக இக்கோரிக்கைகளை  நிறைவேற்றி, பின்னர் மக்களவை ஒப்புதலைப் பெறலாம்.

Leave a Reply